காய்கறி சந்தையில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி தினசரி காய்கறி சந்தையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்தக் கடைகளை 2 நாட்களில் அகற்றக்கோரி நகராட்சி சார்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு நகராட்சி ஆணையாளர் அமுதா மற்றும் அதிகாரிகள் மார்க்கெட்டுக்கு சென்றனர். அப்போது தினசரி மார்க்கெட் முன்பு சாலையோரத்து ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த காய்கறி கடைகளை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து அகற்றினர். இதனையடுத்து சந்தையின் உள்ளே ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்ற முயற்சி செய்துள்ளனர்.
இதனால் வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால், போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது நகராட்சி அதிகாரிகள் கூறியபோது ஆக்கிரமிப்பு பிரச்சினை குறித்து நகராட்சி அலுவலகத்தில் சீக்கிரம் கலந்தாய்வு கூட்டம் மேற்கொண்டு முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்பின் வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றுதலை அதிகாரிகள் கைவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.