2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் கடந்த மாதம் 26-ஆம் தேதி நடந்த ஒரு கொள்ளை வழக்கில் தொடர்புடைய சேரகுளம் பகுதியில் வசிக்கும் இசக்கிநாதன் மற்றும் நெல்லை உடையார்பட்டி பகுதியில் வசிக்கும் இசக்கி சுப்பையாதாஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் சேரகுளம் காவல்நிலையத்தில் இசக்கி நாதன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
மேலும் 2 பேரும் ரவுடிகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் இசக்கிநாதன் மற்றும் இசக்கி சுப்பையாதாஸ் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.