சாராயம் குடித்ததால் 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சேந்தங்குடி தென்பாதி பகுதியில் பிரபு என்பவர் வசித்து வந்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று முன்தினம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டரிடம் கடந்த 27ஆம் தேதி சாராயம் குடித்ததாகவும் அன்று முதல் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் கண் சரியாக தெரியவில்லை எனவும் பிரபு கூறியுள்ளார்.
இதனையடுத்து பிரபுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர் கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பிரபுவிடம் சாராயம் வாங்கிக் குடித்த செல்வம் என்பவரும் நேற்று பரிதாபமாக இறந்துள்ளார். இந்நிலையில் மேலும் பிரபுவிடம் சாராயம் வாங்கி குடித்த வீராசாமி, சரன்ராஜ், செந்தில், சரத்குமார் ஆகிய 4 பேரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.