ஆம்புலன்ஸ் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காளகவுண்டன் பட்டி பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கோட்டை ஊராட்சியில் குடிநீர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய பழனிச்சாமியை 108 ஆம்புலன்சில் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இவருக்கு உதவியாக உறவினரான வீரகுமார் என்பவரும் உடன் சென்றுள்ளார். இந்த ஆம்புலன்சை சங்கர் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் மருத்துவ உதவியாளரான சத்யா என்பவர் இருந்துள்ளார்.
இந்நிலையில் வேடசந்தூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு பழனிசாமியை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது சித்த மருத்துவ பிரிவில் வேலை பார்க்கும் ஊழியரான சுமதி என்ற பெண்ணும் ஆம்புலன்சில் ஏறியுள்ளார்.இந்நிலையில் வேடசந்தூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் விட்டல்நாயக்கன்பட்டி பகுதியில் வைத்து ஆம்புலன்ஸ் மீது திண்டுக்கல் நோக்கி வேகமாக வந்த தனியார் பேருந்து பலமாக மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் சுக்குநூறாக நொறுங்கி விட்டது.
இதில் படுகாயமடைந்த பழனிச்சாமி மற்றும் வீரகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆம்புலன்ஸ் டிரைவர் சங்கர், உதவியாளர் சத்யா, ஊழியர் சுமதி ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனியார் பேருந்தின் ஓட்டுநரான ரமேஷ் குமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.