லாரி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து கடப்பாக்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் சிவாரெட்டி, வரதராஜு ஆகிய தொழிலாளர்கள் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். இந்த லாரியை லட்சுமணய்யா(36) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவரது மகன் வாசு மற்றும் சுப்பா நாயுடு ஆகியோர் அவருடன் இருந்தனர். இந்நிலையில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக லாரியின் வலது பக்க முன்புற டயர் வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கடப்பா கற்கள் விழுந்ததால் சிவாரெட்டி, வரதராஜு ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லட்சுமணய்யா, வாசு, சுப்பா நாயுடு ஆகியோரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.