பாப்பரம்பாக்கம் பகுதியில் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று திருவள்ளுர் ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முதல்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு இன்று வாக்கு பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 45, 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
மக்கள் அனைவரும் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தினர். ஒரு சில இடங்களில் வாக்கு சீட்டுகளில் குழப்பம் இருப்பதாக அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குப்பதிவுக்கு 24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. எந்த வித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க, 63000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இறுதியில் முதற்கட்ட வாக்குப்பதிவு 5 மணிக்கு நிறைவடைந்தது.
இதனிடையே திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகேயுள்ள பாம்பரம்பாக்கம் வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு பதிவு நடைபெற்றபோது மர்மநபர்கள் வாக்குப்பெட்டியை வெளியே எடுத்து வந்து தீ வைத்து எரித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அங்கு வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது. வாக்கு பெட்டியை தீ வைத்தது யார்? என்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பாப்பரம்பாக்கம் பகுதியில் வாக்குப்பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டதால் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று திருவள்ளுர் ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.