கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் கருவிகளை தயாரிக்க 2 தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் அல்டோனா டயக்னஸ்டிக்ஸ், மைலேப் ஆகிய 2 நிறுவனங்கள் கொரோனா பரிசோதனை கருவிகளை தயாரித்து வழங்க உரிமம் பெற்றுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அனைவரையும் பரிசோதனை செய்வது சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது. முன்னதாக நேற்று புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனாவை கண்டறியும் புதிய உபகரணத்தை பயன்படுத்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த உபகரணத்தின் மூலம் ஒரு வாரத்திற்குள் 1.5 லட்சம் சோதனைகள் வரை மேற்கொள்ள முடியும் என அந்த தனியார் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய கருவியின் விலை ரூ.80 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் அல்டோனா டயக்னஸ்டிக்ஸ், மைலேப் ஆகிய 2 நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் கருவிகளை தயாரிக்க அனுமதி பெற்றுள்ளன. மூலப் பொருட்கள் உள்நாட்டிலேயே கிடைப்பதால் கொரோனா பரிசோதனை கருவிகளை தயாரிப்பதில் தோல்வி ஏற்படாது என்று அந்நிறுவனத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.