இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆற்றில் மூழ்கிய சிறுவர்களின் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ஜெயலட்சுமி. இவருடைய உறவினர்கள் கரூரைச் சேர்ந்த ரகுராமன் – தேவி. இந்த தம்பதியருக்கு 12 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ரகுராமன்-தேவி தம்பதியினர் தனது குழந்தைகளுடன் ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் அருகில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது 2 சிறுவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களை காப்பாற்ற சென்ற உறவினர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதையடுத்து சிறுவர்களை எங்கு தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை.
இந்நிலையில் சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் அவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்காக காவிரி ஆற்றங்கரைக்கு பெற்றோர் வந்துள்ளனர். அப்போது குழந்தைகள் இருவரும் மாயமான இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் மண்ணில் பாதி புதைந்த நிலையில் எலும்புக் கூடுகள் புதைந்திருப்பதாக ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு சென்ற பெற்றோர்கள் உறவினர்கள் உதவியுடன் ஆற்றில் கிடந்த எலும்பு கூடுகளை மீட்டுள்ளனர்.
அப்போது அங்கிருந்த எலும்புக்கூட்டின் பல்லை பார்த்து, இது தன்னுடைய பேரனின் பல் தான் என்று சிறுவனின் பாட்டி அடையாளம் காட்டியுள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் எலும்புக்கூடுகளை கைப்பற்றி ஆற்றில் மூழ்கிய 2 சிறுவர்களின் எலும்புக்கூடு தானா? என்பதை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தைகளின் உடல் கிடைக்கும் என்று நினைத்த பெற்றோர்களுக்கு அவர்களின் எலும்புக்கூடுகளே மிஞ்சியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சிறுவர்களின் பெற்றோர்கள் கதறி அழுதுள்ளது காண்போரின் கண்களை குளமாக்கியுள்ளது.