சென்னையை அடுத்த தாம்பரத்தில் இரண்டு இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு தாம்பரம் அற்புதம் நகரைச் சேர்ந்தவர் பிரதீப் , இவர் தனது வீட்டிற்கு அருகே சேலையூரை சேர்ந்த சுரேஷ் என்ற நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளது.இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சென்ற தாம்பரம் காவல்துறையினர் உடல்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.கொல்லப்பட்ட சுரேஷ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் வெளியே வந்துள்ளார். முன்விரோதம் காரணமாக கொலைச் சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது.இதனையடுத்து பரங்கிமலை இணை ஆணையர் மகேஸ்வரியின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.