2011 முதல் தற்பொழுது வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் குறைவான மிக குறைவான தேர்ச்சி சதவிகிதம் இந்த ஆண்டு தான் பதிவாகியுள்ளது.
தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் நோக்கில் 2011 ஆம்ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதல் தேர்வு 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இதில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் தேர்வு எழுதினார்கள். ஆனால் தகுதி பெற்றோர் 2,448க்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்தனர். இதன் காரணமாக உடனடியாக அதே ஆண்டு அக்டோபர் மாதம் தேர்வு மீண்டும் நடத்தப்பட்டது. அதில் தேர்வு எழுதியவர்கள் 5,56,698 பேர், தேர்ச்சி பெற்றவர்கள் 19,046. இதனால் தேர்ச்சி சதவீதம் 1லிருந்து 2.13 சதவீதமாக அதிகரித்தது.
அதற்கு பிறகு 2013ம் ஆண்டு மூன்றாவது ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. அதில் 6 லட்சத்து 66 ஆயிரத்து 355 பேர் தேர்வு எழுதினர். தகுதி பெற்ற எண்ணிக்கை 27 ஆயிரத்து 92 ஆக இருந்தது. அதற்கு பிறகு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் தளர்வு வழங்கப்படதன் காரணமாக கூடுதலாக 4000க்கும் மேற்பட்டோர் தகுதி பெற்றதாக கூறப்பட்டது. இறுதியாக தேர்ச்சி சதவீதம் வழங்கப்படவில்லை. பின் நீண்ட இடைவெளிக்கு பின் 2017 ஆம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 815 பேர் தேர்வு எழுதினர். அதில் 34 ஆயிரத்து 979 பேர் தேர்ச்சி அடைந்தனர்.
அதற்குப்பிறகு 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தான் இருப்பதிலேயே குறைவான பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 5 லட்சத்து 40 ஆயிரத்து 47 பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதில் தகுதி பெற்றவர்கள் எண்ணிக்கை மொத்தமே 867 பேர் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் மிக குறைவான தேர்ச்சி விகிதமாக 0.16 என்ற அளவில் இந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் இருக்கிறது.