கொரோனா தடுப்பூசி முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படுவதாக ரஷிய மந்திரி கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரஸிற்கு எதிராக முதல் தடுப்பூசியை உருவாக்கி, ரஷியா நேற்று முன்தினம் பதிவு செய்திருந்தது. இது உலக அரங்கில் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து மாஸ்கோவில் ரஷிய சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த தடுப்பூசியை தானாக போட்டுக்கொள்ள முன்வருவோருக்கு போடப்படும். ஏற்கனவே ஏறத்தாழ 20 சதவீத மருத்துவர்கள் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெற்றிக்கின்றனர். அவர்களுக்கு இந்த தடுப்பூசி தேவைப்படாது” என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் ,“ ரஷிய மக்களின் தேவைக்கே முன்னுரிமை வழங்கப்படும். அதே சமயத்தில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன” என்றும் தெரிவித்துள்ளார்.