ஆந்திரப் பிரதேசத்தில் தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்து வருகிறார். ஜெகன் தற்போது அங்கு அதிரடியான மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதற்கிடையில் ஆந்திராவில் தற்போது மணல் மீது ஜெகனின் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக கடுமையாக ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டின் காரணமாக சமீபத்தில் விவசாயி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் அப்போது எடுத்துக்கொண்ட காணொலி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது. அதனை முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, மேலும் பிரச்னையை பூதாகரமாக்கினார்.
இதனிடையில் தெலுங்கில் பிரபலமான நடிகரும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் இருந்து ஒரு மிகப்பெரிய நெடுந்தூர நடைபயணத்தை நடத்தத் திட்டமிட்டு உள்ளார்.மேலும் இன்னும் இரண்டு வாரங்களில், ஆந்திராவில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மிக கடுமையான விளைவுகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சந்திக்க நேரிடும் எனவும் பவன் கல்யாண் எச்சரித்துள்ளார்.