சிறுமியை திருமணம் செய்ததற்கு மகனுக்கு உடந்தையாக இருந்த பெற்றோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்
கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்துள்ளார். இவருக்கும் பீளமேடு புதூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் பேருந்தில் பயணம் செய்யும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. சரவணன் தனியார் நிறுவனம் ஒன்றில், ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில், காதலாக மாறி இருவரும் மொபைல் எண்ணை பரிமாறிக் கொண்டு பேசத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தான் நல்ல வேலையில் இருப்பதாகவும், என்னை நம்பி வந்தால் நல்ல முறையில் காப்பாற்றுவதாகவும் ஆசை வார்த்தை கூறி மாணவியை மதுரைக்கு அழைத்துச் சென்று தாலி கட்டி பின் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் சரவணன். சரவணனது பெற்றோர்களும் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் மாணவியின் பெற்றோர்கள் தங்களது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்க, வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் மாணவியை தேடி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மாணவி சரவணன் என்பவருடன் பழகி வந்ததாக வந்த தகவலையடுத்து அவரது வீட்டிற்குச் சென்று விசாரிக்கையில், அவரது பெற்றோர்கள் முன்னுக்குப்பின் முரணாக தனது மகனுக்கு திருமணமே நடக்கவில்லை என்றும், இங்கே எந்த பெண்ணும் இல்லை எனவும் தடுமாறி கூற, சந்தேகமடைந்த காவல்துறை அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்து சோதனையிட்டபோது மாணவியை ஒரு அறைக்குள் பூட்டி வைத்திருந்ததும், சரவணன் அங்கிருந்து தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியை மகன் திருமணம் செய்ததை மறைத்ததோடு மட்டுமல்லாமல், சிறுமியை அடைத்து வைத்திருந்த குற்றத்தின் அடிப்படையில் போஸ்கோ சட்டத்தின்கீழ் சரவணனின் தாய் தந்தையரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சரவணனையும் வலைவீசி தேடி வருகின்றனர்.