திருப்பத்தூரில் வாகனம் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன்-மீனா தம்பதி. இவர்களுக்கு இரண்டு வயதுடைய தர்ஷன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் தர்ஷன் வீட்டின் அருகில் சிறுநீர் கழிக்கச் சென்ற போது திடீரென வந்த தனியார் கல்குவாரி வாகனம் தர்ஷன் மீது மோதியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் மற்றும் காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.ஆனால் பொதுமக்கள் குழந்தையின் சடலத்தை கொடுக்க மறுத்து தனியார் கல்குவாரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை தெரிவித்த பின் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.