20 அடி உயரத்தில் தயாராகும் விவேகானந்தர் சிலையை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுவாமிமலை, திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் பித்தளை பொருட்கள், உலோக சிலைகள் மற்றும் ஐம்பொன் சிலைகள் அதிகளவு தயாரிக்கப்படுகிறது. இவை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கும்பகோணம் கர்ணக்கொல்லை கீழவீதி பகுதியில் ஒரு தனியார் சிற்ப கூடம் அமைந்துள்ளது. இங்கு சிற்பி அமுதலிங்கம் 8 அடி அகலம், 20 அடி உயரத்தில் சுவாமி விவேகானந்தர் உருவச்சிலையை பைபர் பொருட்களைக் கொண்டு தயாரித்து வருகிறார்.
இதனை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மஹராஜ் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது சிறப்பாக சிலையை தயாரிக்கும் சிற்பி மற்றும் தொழிலாளர்களை அவர் பாராட்டியுள்ளார். இந்த சிலை சென்னையில் இருக்கும் தனியார் கல்வி நிறுவனத்தில் நிறுவப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.