திருமங்கலம் மேம்பால திட்டம் மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
மதுரை மாவட்டத்தில் உள்ள இருவதற்கும் மேற்பட்ட கிராமங்கள் திருமங்கலத்தில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் இருக்கின்றது. இந்த கிராமங்களில் விளையும் பருத்தி, காய்கறி, மல்லிகைப்பூ உள்ளிட்ட பொருட்கள் காலை ஏழு மணிக்குள் திருமங்கலம் மார்க்கெட் பகுதிக்கு வர வேண்டும். ஆனால் இடையில் ரயில்வே கேட் பகுதி இருப்பதால் சில நேரங்களில் அடுத்தடுத்து இரண்டு முறை ரயில்கள் கடந்து செல்லும் போது அரை மணி நேரமாவது ஆகின்றது. இதனால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் உரிய நேரத்திற்கு காய்கறிகளை கொண்டு செல்ல முடிவதில்லை.
தினந்தோறும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள், சரக்கு ரயில்கள் என பகல், இரவு நேரத்தில் ஒரு நாளைக்கு 75 முறை செல்கின்றது. ஆகையால் ரயில்வே கேட்டை கடக்க ஒவ்வொரு முறையும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை இருக்கின்றது. இதனால் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல வருடங்களாக அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தார்கள். சென்ற ஐந்து வருடங்களுக்கு முன்பாக மண் பரிசோதனை செய்யப்பட்டு விரைவில் மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பணி ஆரம்பிப்பதற்கு சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் பூமி பூஜை போடப்பட்டது. தேர்தலுக்கு பின்னர் பணிகள் எதுவும் நடக்கவில்லை. ஆகையால் ரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.