மதுரை மாவட்டத்தில் அழகர் கோவில் சாலையில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டமானது மத்திய உரம் மற்றும் ரசாயன துறை மந்திரி ஸ்ரீபக்வந்த் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங் காலோன் மற்றும் கலெக்டர் அனீஸ் சேகர் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளிடம் திட்டங்கள் குறித்து மத்திய மந்திரி கேட்டறிந்தார். பின்னர் மத்திய மந்திரி பத்திரிக்கையாளர்களிடம் பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “மத்திய அரசினுடைய திட்டங்கள் அனைத்தும் தமிழக அரசு முறையாக செயல்படுத்தி வருகின்றது. இது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கென பல்வேறு நலத்திட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. அதன் மூலம் அதிகமானோர் பயன் பெற்று வருகின்றனர். மதுரையில் சுமார் 4.4 லட்சம் வீடுகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் திட்டம் 2024 ஆம் ஆண்டு நிறைவடையும். மேலும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் 20 லட்சம் பேர் மதுரை மாவட்டத்தில் மட்டும் பயனடைந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் யூரியா உள்ளிட்ட உரத் தட்டுப்பாடுகள் இதுவரை இல்லை. நமக்கு தேவைக்கேற்ப உரத்தை மத்திய அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.