ராமநாதபுரத்தில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் உள்ள நயினார்கோவில் யூனியன் சிரகிகோட்டை பகுதியில் வைகை ஆற்று கரையில் மணல் திருட்டு அதிகளவில் நடப்பதாக அப்பகுதி ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். அந்த மனுவில் சிரகிகோட்டையிலிருந்து மஞ்சக்கொல்லைக்கு செல்லும் வழியில் உள்ள வைகை ஆற்றங்கரையில் JCB மூலம் தினமும் இரவுவில் சுமார் 20 லாரிகளில் மணல் கொள்ளை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளனர்
இப்படி தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு பாசனம் செய்ய நீர் வரத்து குறைவதால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையம் மற்றும் தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி பொதுமக்கள் மணல் கொள்ளையை தடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.