Categories
மாநில செய்திகள்

மூளைச்சாவு அடைந்த 20 மாத குழந்தை… தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகள்… மறுவாழ்வு பெற்ற 5 பேர்….!!

மூளைச்சாவு அடைந்த  20 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் உள்ள ரோஹினி பகுதியில் வசித்து வருபவர் ஆஷிஸ் குமார். இவருக்கு தனிஷ்தா என்ற 20 மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த 8ஆம் தேதி தனிஷ்தா வீட்டின் பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது  அவள் எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்துள்ளாள். இதனைக்  கண்ட குழந்தையின் பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விட்டதாக தெரிவித்தனர். அப்போது யாரும் எளிதில் நினைத்துப் பார்க்க முடியாத முடிவினை அந்த கடினமான நேரத்தில் ஆஷிஷ்குமார் எடுத்தார்.

குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு அதே மருத்துவமனையில் உள்ள ஐந்து நபர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது. இது குறித்து பேசிய  குழந்தையின் தந்தை ஆஷிஸ் குமார், தனிஷ்தாவுக்கு  மூளைச்சாவு ஏற்பட்டு விட்டதாகவும் குணப்படுத்தவே முடியாது என்றும்  மருத்துவர்கள் கூறினர். இதனைக் கேட்டதும் ஒரு நிமிடம் எனக்கு உயிரே போய்விட்டது.  குழந்தையின் உடலை மண்ணில் புதைப்பதைக்காட்டிலும் உறுப்புகள் தேவைப்படுவோரின் உடலில் பொருத்தலாம் என முடிவு எடுத்தேன். இது தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்கும் பொது நிச்சயமாக நீங்கள் அதை செய்ய முடியும் என்று தெரிவித்தனர்.

தற்போது அவளது உடல் பாகங்கள் தானம் செய்யப்பட்டதால் அவள் மற்றவர்களின் வாயிலாக உயிரோடு இருக்கிறாள் என்ற ஆறுதலுடன் நாங்கள் வாழ்வோம் என்று அவர் தெரிவித்தார். இது குறித்து பேசிய மருத்துவமனையின் தலைவர்,  தனிஷ்தா குடும்பத்தின் இந்த உன்னத செயல் உண்மையிலேயே பாராட்டக் கூடியது. மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. உறுப்பு தானம் என்பது இந்தியாவில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5 லட்சம் இந்தியர்கள் சரியான உறுப்புகள் இல்லாததால் இறக்கின்றனர். குழந்தையின் இதயம், கல்லீரல், சிறுநீரகம், கருவிழிப் படலம் முதலியவை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த உறுப்புகள் தேவைப்படுபவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Categories

Tech |