20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து முடிவெடுக்க ,பிசிசிஐ- க்கு 28 ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வருகின்ற அக்டோபர், நவம்பர் மாதங்களில் 7 வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 ம் அலையின் தாக்கம் காரணமாக, இந்தியாவில் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இந்தியாவில் போட்டியை நடத்த முடியாமல் போனால், மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று ஐசிசி கூட்டம், காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவது குறித்து முடிவு எடுக்க ஒரு மாதம் கால அவகாசம் வழங்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் (பிசிசிஐ ), ஐசிசி-யிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட ஐசிசி 28ஆம் தேதி வரை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு போட்டி குறித்து முடிவெடுக்க கால அவகாசம் உள்ளது. இதனால் பிசிசிஐ தெரிவிக்கும் முடிவின்படி ,20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்துவது குறித்து ஐசிசி தனது இறுதி முடிவை எடுக்கும்.இதைத்தொடர்ந்து கூட்டத்தில் , டி20 உலகக் கோப்பை போட்டியை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவது, 2024, 2026, 2028, 2030 ஆகிய ஆண்டுகளில் நடைபெற உள்ள டி 20 உலக கோப்பை போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கையை , 16-ல் இருந்து 20 ஆக உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது . அதோடு 2027 ம் ஆண்டு நடக்க இருக்கும், 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் எண்ணிக்கை 10 லிருந்து 14 ஆக உயர்த்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.2024 ஆண்டில் இருந்து 2031 ம் ஆண்டு வரை உள்ள காலக்கட்டத்திற்குள் டாப்-8 அணிகள் மட்டும் பங்கேற்கும், ஐ.சி.சி. சாம்பியன்ஸ்கோப்பை போட்டியை 2 முறையும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிசுற்றை 4 முறையும் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது .