நிலைத்தடுமாறி கார் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே 21 இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சில நேரங்களில் விபத்தும் நடக்கிறது. இந்நிலையில் குன்னூர் அருகே பாய்ஸ் கம்பெனி பகுதியில் கண்ணன் உமாமகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கண்ணன் நீதிமன்றத்தில் ஊழியராகவும், உமாமகேஸ்வரி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இவர்கள் காரமடை பகுதிக்கு காரில் சென்றுள்ளனர். இந்த காரை ஜாகிர் உசேன் என்பவர் ஓட்டியுள்ளார்.
இவர்கள் காட்டேரி பூங்கா அருகே சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த ஓட்டுநர் உள்பட 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கிய கண்ணன், உமாமகேஸ்வரி, ஜாகிர் உசேன் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக குன்னூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.