தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நாகர்கோவில் பகுதியில் நெகிழி பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மகேஷ் எச்சரித்திருந்தார். இந்நிலையில் கோட்டார் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
அந்த தகவலின்படி மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது அதிகாரிகளால் நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் மொத்தம் 200 கிலோ இருந்தது. எனவே இந்த கடைக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அதன்பிறகு வருவாய் துறை அதிகாரிகள் இந்த கடைக்கு சீல் வைத்தனர். மேலும் ஒரு கடையில் 5 கிலோ நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடைக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.