சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் அட்டை வழங்குவதற்கு ரூ.200 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு 4 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நடுவிக்கோட்டை கீழையூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த நாடிமுத்து, நடுவிக்கோட்டை கிராமத்தில் வசித்து வரும் விசாலாட்சி என்ற பெண்ணிடம் புதிதாக ரேஷன் அட்டை வழங்குவதற்கு 200 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் விசாலாட்சி புகார் அளித்துள்ளார்.
அதன்படி அவர்கள் ஏற்பாட்டில் கிராம நிர்வாக அலுவலர் நாடிமுத்துவிடம் ரசாயன பவுடர் தூவப்பட்ட ரூ.200-ஐ கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதையடுத்து நாடிமுத்து மீது சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி உதய வேலவன், நாடிமுத்துவுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதமும், 4 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியுள்ளார்.