தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய மூன்று இடங்களில் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிக்காக 17 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.
கொற்கை அகழாய்வு கள இயக்குநர் தங்கதுரை தலைமையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியின் போது சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இரும்பு உருக்கு, கண்ணாடி மணிகள், வாழ்விட பகுதிகளை உறுதிப்படுத்தும் தொழிற்கூடங்கள் அமைப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் துறையினர் தொடர்ந்து அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொற்கையில் கடந்த 1968 மற்றும் 1969ம் ஆண்டுகளில் ஏற்கெனவே தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளது. அந்த அகழாய்வு பணி தான் தமிழக தொல்லியல் துறை உருவான பின்னர் செய்த முதல் அகழாய்வு பணியாகும். அந்த அகழாய்வின் போது 2800 பழமையானது கொற்கை நகரம் என்பது உறுதியானது. இங்கு துறைமுகம் இருந்தாகவும், இங்கிருந்து கடல்வழி ஏற்றுமதி, இறக்குமதி நடந்தாகவும், பாண்டிய மன்னரின் தலைநகராக இவ்விடம் விளங்கியது எனவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.