வந்தவாசியை அடுத்த கீழ்நமண்டி என்ற கிராமத்தில் 2000 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா கீழ்நமண்டி கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்து வந்ததற்கான தடயங்கள் இருப்பதாக குண்ணகம்பூண்டியை சேர்ந்த மின்வாரிய அலுவலர் பழனி என்பவர் தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன், ஆய்வாளர்கள் சுதாகர், பழனிச்சாமி மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது கிராம நிர்வாக அலுவலர் சபரி உள்ளிட்ட பலரும் உடன் இருந்தார்கள். இது பற்றி வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் பாலமுருகன் கூறும்போது, கீழ்நமண்டி கிராமத்தின் தெற்கு பகுதியில் இருக்கின்ற குண்டுகளால் சூழப்பட்ட இடத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களை புதைத்த ஈமக்காடு இருக்கின்றது.
அந்த ஈமக்காட்டில் 300க்கும் மேலான கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கல் வட்டங்களின் நடுவில் மண்ணுக்கடியில் ஈமப்பேழையில் அக்காலத்தில் இறந்தவர்களின் எலும்புக்கூடுகள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், மண் குடுவைகள், இரும்பு ஆயுதங்கள் மற்றும் பானைகள் ஆகியவற்றை வைத்து புதைத்து விடுவது வழக்கம். அவ்வாறு புதைத்து வைத்து, அந்த இடத்தை சுற்றி வட்டமாக சிறு பாறைகளை பாதியாக புதைத்து அடையாளம் தெரியுமாறு வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதுபோன்ற பல்வேறு கல் வட்டங்கள் இங்கு இருக்கின்றன. இவைகள் 3 மீட்டர் விட்ட முதல் 5 மீட்டர் விட்டம் வரை பல அளவுகளில் காணப்படுகின்றன. அதனை தொல்லியலாளர்கள் பெருங் கால கல்வெட்டுகள் என்று கூறுகின்றனர். இங்கு கிடைக்கும் பெருங்கற்கால கல்வட்டங்களில் சிறப்புக்குரிய குழிக்குறி பாறைகள் நான்கு இடங்களில் இருக்கின்றன.
இதுபோன்று தென்னிந்தியாவில் கர்நாடகத்திலும், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தர்மபுரி பகுதிகளிலும் கிடைக்கின்றன.அந்த வரிசையில் கீழ்நமண்டி கல்வட்ட பகுதியில் கிடைக்கும் குறிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த குழிக்குறி பாறையில் இருக்கின்ற வட்டக்குழிகள் அக்கால மனிதர்களின் வானியல் அறிவினை குறிப்பதாக தொல்லியல் அறிஞர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த கல்வட்டப்பகுதி நெடுங்கல் அல்லது குத்துக்கல் என்று சொல்லப்படுகின்ற 2 மீட்டர் உயரமுள்ள கூர்மையான பாறைக்கற்கள் 2 இடங்களில் இருக்கின்றன.
தொல்லியல் நோக்கில் கீழ்நமண்டியில் கிடைக்கும் பெருங்கற்கால கல்வட்டங்கள், நெடுங்கல், குழிக்குறிபாறை, கறுப்பு சிவப்பு வண்ண பானைகள், இரும்பு ஆயுதங்கள், இரும்பு உருக்காலை இருந்ததற்கான அடையாளங்கள் ஆகியவை தமிழக அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றார்கள். கீழ்நமண்டியில் இருக்கின்ற பெருங்கற்கால கல்வட்டங்கள் சில சேதம் அடைந்துள்ளன. சில கல்வட்டங்களில் உள்ளிருந்த ஈமப்பேழைகள், மண்குடுவைகள், பானைகள் வெளியே சிதறிக்கிடக்கின்றன. தொல்லியல் சிறப்பு வாய்ந்த இந்த கீழ்நமண்டி கல்வட்டங்களை தொல்லியல் துறையினர் முறையாக அகழாய்வு செய்து பண்டைய தமிழரின் பண்பாட்டை வெளிஉலகிற்கு தெரியப்படுத்தவும் பாதுகாக்கவும் வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.