கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, பாரதிய ஜனதா, நாம் தமிழர் கட்சி இடையிலான ஆறு முனை போட்டியில் பாரதிய ஜனதா தவிர்த்த மற்ற ஐந்து கட்சிகளிலும் முதலமைச்சர் வேட்பாளர்கள் முன் நிறுத்தப்பட்டனர். நடந்த முடிந்த தேர்தலில் அவர்களின் நிலை என்னவானது என்று இப்போது பார்க்கலாம். ஆர் கே நகர் தொகுதியில் களமிறங்கிய முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 39,545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 97,218 வாக்குகளும் இரண்டாவது இடம்பிடித்த திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் 57,673 வாக்குகளும், மூன்றாவது இடத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வசந்தி தேவி 4195 வாக்குகளும் பெற்றனர்.
திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி 68,366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கருணாநிதிக்கு 1,21,473 வாக்குகளும் இரண்டாவதாக வந்த அதிமுகவை சேர்ந்த பன்னீர்செல்வத்திற்கு 53,107 வாக்குகளும் மூன்றாவது இடம் பிடித்த இந்தியன் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாசிலாமணிக்கு 13,158 வாக்குகளும் கிடைத்தன. தேமுதிக, மக்கள் நல கூட்டணி, தமாக அணி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட விஜயகாந்த் உளுந்தூர் பேட்டை தொகுதியில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதிமுக சார்பில் போட்டியிட்ட குமரகுரு 64,307 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது திமுகவை சேர்ந்த வசந்த வேலுக்கு 58,135 வாக்குகளும் மூன்றாவது இடத்திற்கு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு 27,152 வாக்குகளும் பெற்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட அன்புமணியால் தென்னகரம் தொகுதியில் இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. திமுக வேட்பாளர் இன்பசேகரன் 76,848 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடம் பிடித்த அன்புமணிக்கு 57,501 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கேபி முனிசாமிக்கு 51,687 வாக்குகளும் கிடைத்தன. நாம் தமிழர் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூர் தொகுதியில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதிமுக சார்பில் களம் இறங்கிய எம்.சி சம்பத் 70,922 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடம் பிடித்த திமுக வேட்பாளர் புகழேந்திக்கு 46,509 வாக்குகள் கிடைத்தன.