தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா பரவல் தடுப்பூசி காரணமாக பல்வேறு நாடுகளில் சற்று குறைந்து வருவதால் ஊரடங்கு, முக கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா போது முடக்கம் அமலில் இருந்த 2020ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் குழந்தை திருமணங்கள் அதிகரித்திருந்ததாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் குழந்தை திருமணங்கள் குறித்த எந்த தகவலும் இல்லாத நிலையில், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. இதன்படி 2019 இல் நாடு முழுவதும் 523 ஆக இருந்த குழந்தை திருமணங்கள் 2020இல் 785 ஆக உயர்ந்துள்ளது என மக்களவையில் கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கர்நாடகத்தில் 2019 ஆம் ஆண்டில் 111 குழந்தை திருமணங்கள் பதிவாகியுள்ள, நிலையில் 2020இல் இந்த எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.
அசாம் மாநிலத்தில் 2019ல் 115 ஆக இருந்த குழந்தை திருமணங்கள் 2020இல் 138 அதிகரித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 40 ஆக இருந்த குழந்தை திருமணங்கள் 2020ல் 77 ஆக உயர்ந்துள்ளது. தெலுங்கானாவில் 35 ஆக இருந்த நிலையில்60 ஆக உயர்ந்துள்ளது. வறுமை காரணமாக பெண் குழந்தைகளை 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து தருவதும், பெண் குழந்தைகளை பாதுகாக்க எண்ணி, திருமணம் செய்துதருவதும் முக்கிய காரணங்களாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.