அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை சென்னை அணி வென்றுள்ளது. இதற்கு இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று பாராட்டு விழா நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் அணியின் உரிமையாளர் சீனிவாசன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: “சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை காண நீங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறீர்கள். அந்த தருணம் வெகு தொலைவில் இல்லை. பதினைந்தாவது ஐபிஎல் தொடர் கட்டாயம் இந்தியாவில்தான் நடக்கும். அதில் புதிய அணிகள் இணைந்திருப்பதால் உற்சாகமாக இருக்கும். இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் டோனி. டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக பணியாற்றுவதற்கு டோனி ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. மேலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும்” என்று அவர் தெரிவித்தார்.