தமிழகத்தில் அரசு துறையிலுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு, அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன்முலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். வருடந்தோறும் காலிப் பணியிடங்களை பொறுத்து தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகி வருகிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. அதுமட்டுமல்லாமல் திட்டமிடப்பட்ட குரூப் தேர்வுகளும் நடைபெறவில்லை. தற்போது 2022ம் ஆண்டு தொடங்கி இருப்பதை அடுத்து இந்த ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.
அவற்றில் 2022ஆம் வருடத்தில் 22 வகை போட்டித் தேர்வுகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வருடம் முதல் போட்டித் தேர்வுகளில் புதிய மாற்றங்களையும் தேர்வாணையம் கொண்டு வந்துள்ளது. அந்த அடிப்படையில் அரசு பணிகளில் தமிழ் மக்களை பணியமர்த்தும் நோக்குடன் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ் மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1, 2, 2A , 3, 4 உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித் தேர்வு குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெறுவது அவசியமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே, அடுத்த ‘பி’ பிரிவில் எழுதிய விடைத்தாள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குரூப்-3, 4, 7-பி, 8 ஆகிய பதவிகளுக்கான போட்டித்தேர்வின் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வுக்கான பாடத்திட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) இணையதளத்தில் வெளியாகியுள்ளது.