2022ஆம் டிசம்பர் மாதம் வரை ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்க வேண்டும் என்று ஐடி நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர். தற்போது சூழல் சரியாகி கொண்டு இருப்பதால் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு வரும்படி அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் அடுத்த ஆண்டு இறுதிவரை ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு ஐடி நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து தொழில்நுட்ப மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் கூடுதல் முதன்மை செயலாளர் ரமணா ரெட்டி பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது தெரிவித்ததாவது:
“பெங்களூருவில் கிருஷ்ணராஜபுரம் சில்க் போர்டு சாலையில் அடுத்த ஒரு ஆண்டிற்கும் மேலாக மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்த பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளதால் ஐடி ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு வரும்பொழுது போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே ஐடி நிறுவன ஊழியர்கள் தங்களது ஊழியர்களை 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறி அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு பல ஐடி நிறுவனங்கள் ஒப்புதல் அளித்து பதில் கடிதம் அனுப்பியுள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.