2022 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.
8ஆவது டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (53), விராட் கோலி (62*), சூர்யகுமார் யாதவ் (51*) அதிரடியால் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில் தொடர்ச்சியாக 2ஆவது வெற்றியைப் பெற்றதன் மூலம், குரூப் 2 வில் உள்ள இந்தியா 4 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு 25ஆவது இன்னிங்ஸ் ஆகும்.. இப்போட்டியில் 25 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 51 ரன்கள் எடுத்ததால் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.. அதாவது டீம் இந்தியா பேட்டர் சூர்யகுமார் யாதவ் 2022 இல் டி20ஐ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் ஆனார். 32 வயதான அவர் நெதர்லாந்துக்கு எதிராக 51*(25) ரன்கள் எடுத்ததன் மூலம் 2022 இல் டி20 கிரிக்கெட்டில் 41.28 சராசரியுடன் 867 ரன்கள் எடுத்து முகமது ரிஸ்வானை பின்னுக்கு தள்ளியுள்ளார்.. இந்த ஆண்டு 19 இன்னிங்ஸ்களில் 51.56 சராசரியுடன் 825 ரன்கள் எடுத்திருந்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-ஓப்பனர் முகமது ரிஸ்வானை முந்தி சாதனை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ்..