தமிழ் சினிமாவில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஏதாவது ஒரு சில படங்கள் தான் ரசிகர்கள் மனதை வென்று வெற்றி பெறுகிறது. அந்த வகையில் சினிமாவில் ஏராளமான புது முகங்கள் அறிமுகமானாலும் ஒரு சிலர்தான் ரசிகர்களை கவர்ந்து திரையுலகில் நிலைத்து நிற்கிறார்கள். அந்த வகையில் 2022-ம் ஆண்டில் அறிமுகமான புதுமுக நடிகைகளில் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தவர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி உப்பேனா என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி செட்டிக்கு முதல் படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி படு பிஸியாக நடித்து வருகிறார்.
அதன் பிறகு பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதிதி தற்போது சிவகார்த்திகேயனுடன் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து கேஜிஎஃப் படத்தில் அறிமுகமான நடிகை ஸ்ரீநிதி செட்டி தமிழில் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இருப்பினும் நடிகை ஸ்ரீநிதி செட்டிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். மேலும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சித்தி இத்னானி முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்ததால் இவருக்கும் அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது.