Categories
அரசியல்

#2022 Revind# : இந்திய அரசியலில் மறக்க முடியாத 10 முக்கிய நிகழ்வுகள்…. இதோ முழு விவரம்….!!!!!!

இந்திய அரசியலில் 2022-ம் ஆண்டில் நடந்த பல்வேறு விதமான முக்கிய நிகழ்வுகள் மக்களின் கவனத்தை எடுத்துள்ளது. அந்த வகையில் இந்திய அரசியலில் நிகழ்ந்த மக்கள் மறக்க முடியாத முக்கிய 10 நிகழ்வுகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதனபடி,

1)  சட்டமன்ற தேர்தல்:

உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில்  சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்க, பஞ்சாபில் முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி கட்டிலில் அமர்ந்தது.

2)  மகாராஷ்டிராவில் சிவசேனா:

மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த சிவசேனா கட்சியில் திடீரென விரிசல் ஏற்பட எம்எல்ஏ ஏக்நாத் சிண்டே தலைமையில்‌ சில எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிலையில், சிவசேனா ஆட்சி மகாராஷ்டிராவில் கவிழ்ந்தது. பாஜக கூட்டணியுடன் ஏக்நாத் சிண்டே மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.

3)  இந்தியாவின் 15-வது குடியரசு தலைவர்:

இந்திய நாட்டின் 15-வது ஜனாதிபதியாக யார் பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், பாஜக பரிந்துரைத்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த திரௌபதி முர்மு இந்திய நாட்டின் 15-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

4)  பீகாரில் கூட்டணி மாற்றம்:

கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா கட்சி போட்டியிட்ட நிலையில், முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்றார். பாஜக-ஐக்கிய ஜனதா கூட்டணி 2 வருடங்கள் நீடித்த நிலையில், திடீரென முதல்வர் நிதிஷ்குமார் பாஜக தனக்கு எதிராக சதி செய்வதாக கூறி கூட்டணியை விட்டு விலகி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தார்.

5)  ஜார்கண்ட் சலசலப்பு:

ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரன் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக பாஜக புகார் கொடுத்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஆளுங்கட்சிக்கு வாக்களித்ததால் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆட்சி நீடித்தது.

6)  இந்திய ஒற்றுமை பயணம்:

நாட்டின் 2-வது பெரிய தேசிய கட்சியான காங்கிரஸ் வலுவிழந்து காணப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் பலர் கட்சியை விட்டு விலக ஆரம்பித்தனர். அதோடு சரியான தலைமை இல்லாததால் காங்கிரஸ் கட்சியில் பல சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே நியமிக்கப்பட்டார். வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பலம் தேவை என்பதால் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கையில் எடுத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைப்பயணம் வருகிற பிப்ரவரி மாதம் காஷ்மீரில் நிறைவடையும்.

7)  இந்தியாவில் பி.எஃப்.ஐ அமைப்புக்கு தடை:

இந்தியாவில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு செயல்பட்டு வந்த நிலையில், பல பயங்கரவாத செயல்களுக்கு இந்த அமைப்பு துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது நிரூபிக்கப்பட்டது. இதனால் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு இந்தியாவில் 5 வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

8)  காங்கிரஸ் புதிய தலைவர்:

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக நேரு காலத்தில் இருந்து காந்தி குடும்பத்தினர் இருந்து வந்த நிலையில், முதல் முறையாக மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 26-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

9)  உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் மறைவு:

உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் 3 முறை முதல்வராக இருந்துள்ளார். இவர் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர். இவர் அரசியலில் 10 முறை எம்எல்ஏவாகவும், 7 முறை எம்பி ஆகவும், 3 முறை மாநில முதல்வராகவும், 1996-1998 ஆம் ஆண்டு கால கட்டத்தில் மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். கட்சியினரால் நேதாஜி என்று அன்போடு அழைக்கப்பட்ட முலாயம் சிங் உடல்நல குறைவால் கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி காலமானார்.

10)  டெல்லி துணை முதல்வர் மணி சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை:

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதல்வராக மணீஷ் சிசோடியாவும் இருக்கிறார்கள். இதில் மணீஷ் சிசோடியா வீட்டில் மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிரடி சோதனை நடத்திய நிலையில், மணீஷ் சிசோடியா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Categories

Tech |