Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2024 டி20 உலக கோப்பை…. 20 டீம்…. “சூப்பர் 12 சுற்று கிடையாது”…. ஐசிசியின் அதிரடி மாற்றம்…. ரூல்ஸ் என்ன?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 வெற்றிகரமான முடிவுக்குப் பிறகு, ஐசிசி 2024  டி20 உலகக் கோப்பையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றது. இதில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. மீதமுள்ள 8 அணிகள் குரூப் ஏ, குரூப் பி என இரு பிரிவினாக பிரிக்கப்பட்டு முதல் சுற்றுப் போட்டியில் மோதியது. இதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதன் பின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் 6 அணிகள், குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் இரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் வென்ற அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

இந்நிலையில் ஐசிசி 2024  டி20 உலகக் கோப்பையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 நிலைக்குச் சென்ற உலகக் கோப்பையைப்போல் இல்லாமல், 2024 இல் ஒரு புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட வடிவம் பின்பற்றப்படுகிறது. வரவிருக்கும் 2024 டி20 உலகக்கோப்பை அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கிறது. இப்போது, ​​2024 டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்று அல்லாமல் 20 (12+8) அணிகளும், தலா 5 அணிகளாக கொண்டு 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தலா ஒருமுறை முதல் சுற்றில் மோதும். மேலும், 4  பிரிவிலிருந்து முதல் 2 இடங்களை பிடிக்கும் 8 அணிகளும் முன்பு நடந்த சூப்பர் 12 நிலைக்கு பதிலாக சூப்பர் 8 நிலைக்கு முன்னேறும்.

இதையடுத்து 8 அணிகளும் தலா 4 அணிகள் கொண்ட இரு  பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதும். அதில் இரு பிரிவிலிருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பின்  அரையிறுதியில் வெல்லும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். 2024 நிகழ்வில்  55 போட்டிகள் இருக்கும், மூன்றில் ஒரு பங்கு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறும், மற்றவை மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும். மேலும், ஐசிசியின் படி, புதுப்பிக்கப்பட்ட, நீட்டிக்கப்பட்ட வடிவம் 2030 உலகக் கோப்பை வரை இருக்கும்.

முன்னதாக ஐசிசி உறுதிப்படுத்தியபடி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக்கோப்பை முடிவின் படி முதல் 8 அணிகள் நேரடியாக 2024 டி20 உலககோப்பைக்கு தகுதிபெற்றுள்ளன. அதாவது குரூப் 1 மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து சூப்பர் 12 கட்டத்தின் முதல் 4 அணிகளான நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை  மற்றும்  இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய 4அணிகள் என மொத்தம் 8 அணிகள் நேரடியாக 2024 உலகக் கோப்பையில் தங்கள் இடங்களை உறுதிப்படுத்தியுள்ளன. இதனுடன், ஐசிசி டி20 அணி தரவரிசையில் அடுத்த சிறந்த அணிகளான ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசமும் 9 மற்றும் 10ஆவதாக தங்கள் இடங்களை உறுதிப்படுத்தியுள்ளன. இப்போது அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் போட்டியை நடத்துவதால் அவர்கள் 11 மற்றும் 12ஆவது அணிகளாக நேரடியாக தகுதி பெறுகிறார்கள், எனவே மொத்தம் 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றது.

இப்போது, ​​மீதமுள்ள 8 அணிகளுக்கான இடங்களுக்கு தகுதி சுற்று போட்டி வைக்கப்பட்டு தீர்மானிக்கப்படும். அதன்படி ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களிலிருந்து தலா 2 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் 6 அணிகள் தேர்வாகும்.. மீதமுள்ள 2 அணிகள் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா-பசிபிக் நாடுகளிலிருந்து தேர்வாகும். இந்த கண்டம் மற்றும் நாடுகளிலிருந்து  மொத்தம் 8 அணிகள் தேர்வாகும் இடங்களைப் பிடிக்கும்.

Categories

Tech |