2026இல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதிபடத் தெரிவித்துள்ளார். தனித்துப் போட்டியிட்டு வெல்வோம் என்று கூறவில்லை என்ற அவர், அடுத்த 10,15 ஆண்டுகளுக்கு எந்த கட்சியும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்றார். கூட்டணிக்கட்சியினர் இணைந்து ஆட்சியமைப்போம் என்றும் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி சென்னை விமான நிலையத்தில் காமராஜரின் பெயர் பலகையை விரைவில் வைக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் பாமக சார்பாக போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார். தமிழகத்தின் கல்வி கண்ணை திறந்தவர் காமராஜர். வறுமையில் பசியோடு மாணவர்கள் படிக்க முடியாது என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர். காமராஜர் எவரும் செய்யாத கல்விப் புரட்சியை செய்து காட்டியவர் என்று பேசியுள்ளார்.