கடந்த வருடம் டிசம்பர் மாதம் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான திருவொற்றியூரில் உள்ள 3 மாடி குடியிருப்பு ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் இருந்த 24 வீடுகள் தரைமட்டமாகியதாகவும், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் செய்தி வெளியாகியது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த வீடுகளில் 336 குடியிருப்புகள் இருந்த நிலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் அந்த பகுதியில் திடீரென்று 24 வீடுகள் இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருவெற்றியூர் வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டது என்பதும், இது தொடர்பாக தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு தற்போது அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருவொற்றியூரில் சேதமடைந்த நிலையில் தற்போது 20 ஆயிரத்து 453 வீடுகள் உள்ளதாகவும், இந்த குடியிருப்புகளை உடனடியாக இடிக்க வேண்டும் என நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்திடம் தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.