நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகள் உள்பட இந்தியாவில் மொத்தம் 460 கும் அதிகமான இடங்களில் வாகன ஓட்டிகள் அதிக கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் நெடுஞ்சாலை பராமரிப்புக்காக வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஏப்ரல் 1 முதல் இந்த கட்டணம் உயரும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் சுங்க கட்டணம் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 8 நாட்களில் ரூ.8 ஏற்றப்பட்ட டீசல் விலையை அடுத்த 21 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளனர்.