நீலகிரி மாவட்டத்தில், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ள டி23 புலி சிகிச்சைக்கு பின்னர் மைசூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. நீலகிரி மாவட்டம், மசினகுடி மற்றும் கூடலூரில், 4 மனிதர்களை கொன்ற புலியை பிடிக்க கடந்த 21 நாட்களாக அதிகாரிகள் தேடி வந்த நிலையில், நேற்று இரவு அதிகாரிகளிடம் புலி சிக்கியது. இதையடுத்து புலிக்கு அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தியுள்ளனர்.
மயக்க ஊசி செலுத்திய பின்னர் புலி தப்பியதால் புலியை தேடும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் 2 முறை மயக்க ஊசி செலுத்தியும், பிடிபடாமல் போக்கு காட்டிய நிலையில், 2 வது முறையாக மயக்க ஊசி செலுத்தியபோது புலி பிடிபட்டது. மாயார் வனப்பகுதியில் பதுங்கியிருந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சிகிச்சைக்குப் பின்னர் மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட புலி மைசூர் வனவிலங்கு பூங்காவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. மைசூரு உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மையத்திற்கு டி23 புலி கொண்டு செல்லப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. டி 23 புலியின் உடல்நிலை சீராக இருக்கிறது. மேலும் 4 கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து புலியை கண்காணித்து வருகின்றனர்.