புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உள்ள பகுதியில் வசிக்கும் 21 காவலர்களை தனிமையில் இருக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள மாஹேவைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவருக்கு முதன் முறையாக கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வந்த இவருக்கு மாஹே அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் புதிதாக மூன்று பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இரண்டு பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள். இதனையடுத்து புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதி முழுவதும் கடந்த வாரம் முதலே போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மக்கள் யாரும் வெளியே வர கூடாது என உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் புதுச்சேரியில் அரியங்குப்பம் பகுதியில் 3 பேருக்கு கொரோனா உறுதியானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் வசிக்கும் 21 காவலர்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 21 காவலர்களும் பணிக்கு வர வேண்டாம். தங்களை தனிமைப்படுத்தி வீட்டிலேயே இருக்குமாறு புதுச்சேரி காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.