திண்டுக்கல் மாவட்டத்தில் தாய் இறந்தது தெரியாமல் குழந்தைகள் 22 நாட்களாக சடலத்துடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமை காவல் அதிகாரியாக இந்திரா என்பவர் பெயரை செய்து வந்துள்ளார். அவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திண்டுக்கல் பகுதியில் தனது குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர்களுடன் இந்திராவின் சகோதரியும் மூன்று மாதங்களாக தங்கி வந்தார். சிறுநீரக பிரச்சனை காரணமாக இந்திரா சிகிச்சை பெற்று வந்த நிலையில், காவல்துறையில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு முயற்சி செய்துள்ளார்.
இந்நிலையில் ஓய்வு பெறுவது பற்றி எந்த தகவலும் மேலதிகாரிகளுக்கு முறையாக தெரிவிக்காமல் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்துள்ளார். அதனால் அவர் அடிக்கடி விடுப்பு எடுப்பது பற்றி காவல்துறையினர் வீட்டிற்குச் சென்று விளக்கம் கேட்டனர். ஆனால் அந்த வீட்டில் இந்திரா இல்லை என்று கூறி குழந்தைகளும், இந்திராவின் சகோதரியும் காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். இதனையடுத்து அவர்களின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இந்திராவின் உடல் துணியால் சுற்றப்பட்ட கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி குழந்தைகளிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, “எங்கள் அம்மா தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலையில் எழுந்து விடுவார். அவருடைய தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்” என்று சாதாரணமாக கூறியுள்ளனர். அதுமட்டுமன்றி இந்திராவின் சகோதரியும் என் தங்கை உயிருடன் இருக்கிறார் என்று கூறி காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதனையடுத்து இந்திராவின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் வீட்டிலேயே பிரேத பரிசோதனை செய்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு இந்திராவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தாய் இறந்தது தெரியாமல் 22 நாட்கள் சடலத்தோடு குழந்தைகள் வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.