நேபாளம் நாட்டின் சுற்றுலா நகரமான போகாராவிலிருந்து 22 பேருடன் நேற்று காலை தாராஏர் எனும் விமானம் புறப்பட்டது. அவ்வாறு புறப்பட்ட சிலநிமிடங்களில் விமானம் காணாமல் போய்விட்டது. அந்த விமானத்தில் 4 இந்தியர்களும், 2 ஜெர்மனியர்களும், 13 நேபாள பயணிகளும், 3 விமான ஊழியர்களும் பயணம் மேற்கொண்டனர். விமானம் மாயமானதையடுத்து அதனை தேடும் பணியில் நேபாள ராணுவமானது தீவிரமாக ஈடுபட்டது.
அதாவது விமானத்தின் சிக்னல், விமானியின் மொபைல்போன் சிக்னல் ஆகியவற்றை கொண்டு விமானம் விபத்துக்குள்ளானதா..? விமானத்தின் நிலை என்ன..? என்பது தொடர்பாக மலைப் பகுதியில் நேபாள ராணுவம் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டது. இந்தநிலையில் காணாமல்போன விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.
அதன்படி முஸ்டங் மாகாணம் தசங்-2 என்ற பகுதியில் சனோஸ்வெர் என்ற இடத்திலுள்ள மலைப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதை ராணுவம் கண்டுபிடித்துள்ளது. மேலும் விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப் பகுதியில் கிடந்ததை ராணுவம் இன்று கண்டுபிடித்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் ராணுவம் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலை என்ன..? யாரேனும் உயிருடன் இருக்கின்றனரா? என்பது பற்றி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.