ஜப்தி செய்ய வந்த அதிகாரிகளுடன் வருவாய்த்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சட்டையம்பட்டி கிராமத்தில் மாரக்கவுண்டர்-பார்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் கையகப்படுத்தி பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளார். இதுகுறித்து கடந்த 2004 -ஆம் ஆண்டு மாரக்கவுண்டர் சார்பு நீதிபதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 2008- ஆம் ஆண்டு அரூர் சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் நீதிபதி கடந்த 2012 -ஆம் ஆண்டு மாரக்கவுண்டருக்கு 13 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் தாசில்தார் எந்த ஒரு இழப்பீடும் வழங்கவில்லை.
இதனையடுத்து மாரக்கவுண்டர் கடந்த 2015 -ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வட்டி, அசல் என மொத்தம் 22 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இழப்பீடு வழங்க தவறினால் தாசில்தார் அலுவலகப் பொருட்கள் ஜப்தி செய்யப்படும் எனவும் அதிரடியாக உத்தரவிட்டார். ஆனால் இழப்பீடு தொகை இதுவரை வழங்கவில்லை. இதனால் நேற்று முன்தினம் ஆதிதிராவிடர் நல தாசில்தார் அலுவலகத்திற்கு சென்ற அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலி, பிரிண்டர் உள்ளிட்ட பொருட்களை வெளியே எடுத்து வைத்தனர். இதனை பார்த்த வருவாய் துறை அலுவலர்கள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அதிகாரிகள் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.