நீட் தேர்வை எதிர்க்கும் துணிச்சல் அதிமுகவுக்கு இல்லை என திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கோரி திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் முக.ஸ்டாலின், 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி சட்டமன்றத்திலே தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் நீட்டிற்கு விலக்கு தந்திட வேண்டும் என்று 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய எல்லாக் கட்சிகளும் ஒருங்கிணைந்து ஏகமனதாக அந்த 2 மசோதாக்கள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு டெல்லிக்கு ஜனாதிபதிக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் 7 மாதங்கள் கழித்து தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது. 7 மாதங்கள் கழித்து திருப்பி அனுப்பப்பட்ட செய்தியை சட்டமன்றத்தில் சொன்னார்களா ? அல்லது அறிக்கை வெளியிட்டு சொன்னார்களா ? செய்தி குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறதா ? கிடையாது. ஆனால் நீதிமன்றத்திற்கு அந்த செய்தி வருகிறது. நீதிமன்றத்திலே இந்த பிரச்சனை வருகிறபோது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்று நமக்கெல்லாம் அப்போது தான் தெரியும்.
அதுவும் நீதிமன்றத்திற்கு வந்து நமக்கு 23 மாதம் கழித்து தான் தெரிகின்றது. அதை நான் சட்டமன்றத்தில் தக்க ஆதாரத்தோடு எடுத்து வைத்தேன். அப்போது மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார் சட்டத்துறை அமைச்சர். ஒப்புக் கொண்டது மட்டுமல்ல… இந்த ஆட்சியில் நாங்கள் ஒருபோதும் நீட் அனுமதிக்க மாட்டோம், சட்டரீதியாக சந்தித்து அதை எதிர்த்தே தீருவோம் என்று அப்போது உறுதி சொல்லப்பட்டது.
அதே போல அதிமுகவின் பொதுக்குழு தீர்மானத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் நீட் ரத்து வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவும் சொல்லிவிட்டு… இன்றுவரை நீட்டை எதிர்க்கக்கூடிய துணிச்சல் அதிமுகவுக்கு இல்லை. எல்லாமே மக்களை ஏமாற்றுவதற்காக சொல்லப்பட்டது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் சாடியுள்ளார்.