தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் சார்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாக அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு அறிவித்து வருகிறது. மேலும் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதில் அதிமுக 23 தொகுதிகளை பாமக கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. மேலும் பாஜக தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் சார்பாக 234 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 20 கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அந்த தேர்வில் 162 அதிகாரிகள் தேர்ச்சி பெற்றனர். 72 அதிகாரிகள் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்ற 5 ஆம் தேதி மறு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.