புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.9,924 கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். 2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு உரையாற்றிய அவர், மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.6,190 கோடியாக உள்ளது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன். தமது ஆட்சி பொறுப்பை ஏற்க உறுதுணையாக இருந்த பிரதமருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மின் விளக்குகளையும் எல்இடி விளக்குகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் 24 மணி நேரமும் மின் இணைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி மாநிலத்தின் மின் பற்றாக்குறை இல்லை என்று தெரிவித்துள்ளார்