வால்பாறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 15 மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக வால்பாறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர தடுப்பூசி மையத்தை தலைமை மருத்துவர் மகேஷ் ஆனந்தி தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து முதல் நாளில் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக ஏராளமானோர் மருத்துவமனையில் திரண்டனர்.
இதனால் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு 100 டோஸ் கோவேக்சின், 750 டோஸ் கோவிஷீல்டு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை மருத்துவர் மகேஷ் ஆனந்தி கூறும் போது, சுகாதாரத் துறையின் திட்டப்படி 24 மணி நேர தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளதாகவும், பணியாளர்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே தாமதிக்காமல் பொதுமக்கள் தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.