Categories
அரியலூர் மாநில செய்திகள்

24_ஆம் தேதி தமிழகம் முழுவதும் விசிக போராட்டம்….. திருமாவளவன் அறிவிப்பு…!!

பொன்பரப்பி கிராமத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் விசிக கட்சி சார்பில் 24_ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் போட்டியிடும் சின்னமான பானையை ஒரு சிலர் உடைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்கப்பட்டார். இதனையடுத்து மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பொன்பரப்பி கிராம குடியிருப்பில் புகுந்த மற்றொரு தரப்பினர் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து , மேற்கூரையை சேதப்படுத்தினர். மேலும் இந்த தாக்குதலில்  இருசக்கர வாகனமும் தீ வைத்து கொளுத்தப்பட்ட நிலையில் பெண் உள்பட 5க்கும் மேற்பட்டோர் மீது காயமுற்றனர்.

இது தொடர்பாக காவல்துறை 25க்கும் மேற்பட்டோர் மீது  வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருப்பவர்களை தேடி வருகின்றது. இந்நிலையில் பொன்பரப்பி கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஏப்ரல் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து இந்த போராட்டத்தை நடத்தப் போவதாக அவர் தெரிவித்தார்.மேலும் இந்த கொடூரத் தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் மீது  நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார் .

Categories

Tech |