கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரையான பகுதியை நான்கு வழி சாலையாக மாற்றும் திட்டம் கைவிடப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு ஒத்துழைக்காது தான் இதற்கு காரணம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுபற்றி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் அல்கா உபாத்யாயாகடந்த 8ம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்புக்கு எழுதியுள்ள கடிதத்தில், “4 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்காக கிழக்குக் கடற்கரை சாலையின் மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரையிலான பகுதியை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைக்க தமிழக அரசு தயாராக இல்லை. அதனால், 4 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிடுவதையும், அதற்காக அந்த சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானத்திற்கு முந்தைய பணிகளை கைவிடுவதையும் தவிர தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு வேறு வழியில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கிழக்குக் கடற்கரை சாலையை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழக சாலை மேம்பாட்டுக் கழகம் தான் அமைத்து நிர்வகித்து வருகிறது. அந்த சாலையில் இந்த நிறுவனம் தான் சுங்கக்கட்டணமும் வசூலிக்கிறது. கிழக்குக் கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைப்பதால் ஏற்படும் இழப்பையும், அதற்காக வாங்கப்பட்ட கடனையும் ஈடுகட்டுவதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ரூ.222.94 கோடி வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டதும், அதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்புக்கொள்ளாதது தான் சிக்கலுக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி நெடுஞ்சாலைகள் ஆணையத்துடன் தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை செயலாளர் நடத்திய பேச்சுக்களின் போது எந்த இழப்பீடும் இல்லாமல் கிழக்கு கடற்கரை சாலை அனைத்தும் ஒப்படைக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது. தமிழக சாலை மேம்பாட்டு கழகம் கோரும் 223 கோடியை தமிழக அரசு வழங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதை நிலைப்பாட்டை இப்போது அரசு மேற்கொண்டால் ஈசிஆர் நான்கு வழி சாலை அமைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. சென்னைக்கும், புதுவைக்கும் இடையிலான கிழக்கு கடற்கரை சாலை விபத்து சாலை என அழைக்கப்படும் அளவிற்கு மிகவும் ஆபத்தான சாலையாக இருக்கிறது. இந்த சாலையில் பாம்பை விட நான்கு மடங்கு மோசமான வளைவுகள் இருக்கிறது.
இவை அனைத்தையும் சரி செய்வது முதலில் நான்கு வழி சாலையாக அதன்பின் ஆறு வழிச்சாலை ஆகும் எட்டு வழி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். மேலும் இதைத்தான் பாமக 25 ஆண்டுகளாக வலியுறுத்தி கொண்டிருக்கிறது. மிக முக்கிய சாலையை நான்கு வழிச்சாலையாக உயர்த்தும் திட்டம் கைவிடப்பட்டது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் மத்திய அரசிடம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடமும் தமிழக அரசு செயலாளர் நிலையில் பேசி நான்கு வழி சாலை திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.