கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 25-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் 500-டிற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில் பல வாகனங்கள் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்திருப்பதாக காவல் நிலைய அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான புகாரின்பேரில் மார்த்தாண்டம் காவல்துறை ஆய்வாளர் ஆதிலிங்கம் போஸ், உதவி ஆய்வாளர் சுரேஷ் உட்பட மூன்று காவலர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். வழக்குகளில் சிக்கி காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்களை காவல்துறை அதிகாரிகாலே கள்ளத்தனமாக விற்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.