பின்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்ட ஒரு பன்னாட்டு தகவல் தொடர்பு நிறுவனம் நோக்கியா ஆகும். நோக்கியா 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை, மொபைல் சாதனங்கள் தயாரிப்பு, இணையம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பதுறைகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நோக்கியா கம்பெனியின் உலகளாவிய ஆண்டு வருமானம் 5.7 பில்லியன் யூரோக்கள் ஆகும்.
இப்போது வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என ஏராளமான சமூக வலைதளங்கள் இருக்கிறது. ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலானோர் நோக்கியா மொபைலை வைத்து அதன் மூலம் அன்பை பரிமாறிக்கொண்டனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் நோக்கியா மொபைல் 90’s கிட்ஸ் வாழ்க்கையில் மிக பெரும் பங்கு வகித்துள்ளது. 90’s கிட்ஸின் விருப்பமான நோக்கியா மொபைல் மிகவும் திண்ணமாக உடையாத அளவுக்கு அமைக்கப்பட்டிருந்தது. இப்போது இருக்கும் ஸ்மார்ட்போனை ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஆனால் நோக்கியா மொபைலை பல ஆண்டு காலங்கள் பயன்படுத்தியவர்களும் உண்டு. உலகத்திலேயே அதிகமாக விற்பனை செய்யப்பட்ட மொபைல் என்ற சாதனையை நோக்கியா 1100 படைத்துள்ளது. கிட்டத்தட்ட 250 மில்லியன் நோக்கியா 1100 மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள புதிய மாடல் செல்போன்கள் கூட இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பில்லை என சிலர் தெரிவித்துள்ளனர்.